கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட் செய்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு ஆறுகள், அணைகள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நேற்று முன்தினம் வரை 15 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மழைக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் 105 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல முகாம்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை அமித் ஷா டிவிட்டரில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ என்.டி.ஆர்.எப். குழுக்கள் ஏற்கனவே அனுப்பட்டுள்ன. அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்ததனை செய்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.