ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சி கைமாறிய உடன் அதிகார மட்டத்திலும் அதிரடி மாற்றங்களை தலிபான்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விமானங்களில் தப்பிச்செல்ல ஆப்கானிஸ்தானியர்களோ போக இடமில்லாமல் நரகத்துக்குள் நுழைவதற்கு மனம் ஒப்பாமல் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த 20 ஆண்டு காலம் தலிபான்களை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்தனர்.
முந்தைய ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் அவர்களை எதிர்த்து கருத்துகளை முன்வைத்தனர். குறிப்பாக தலிபான்களை குற்றவாளி கூண்டில் ஏற்றிய பெண் காவலர்கள், குற்றவாளிகளாக தீர்ப்பளித்து சிறைக்கு அனுப்பிய பெண் நீதிபதிகள் ஆகியோர் தலிபான்களின் டார்கெட்டாக மாறியிருக்கிறார்கள். அவர்களைப் பழிக்குப் பழி வாங்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து நீதிபதிகளும் காவலர்களும் பாதுகாப்பான இடத்தில் பதுங்கியுள்ளனர். ஆனாலும் தலிபான்கள் வீடு வீடாக தேடி குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
இச்சூழலில் கர்ப்பிணி காவலர் ஒருவரை தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோர் மாகாணத்தைச் சேர்ந்தவர் பானு நிகரா. ஆப்கானிஸ்தான் காவல் துறையில் பணியாற்றும் பானு 6 மாத கர்ப்பிணியாவார். பானுவை நேற்று இரவு தலிபான்கள் அவரின் குழந்தைகள், கணவர், குடும்பத்தார் முன்னிலையில் சுட்டுக் கொலை செய்தனர் என்று அங்குள்ள பத்திரிகையாளர் சர்வாரி என்பவர் ட்வீட் செய்தார். ஆனால் தாங்கள் சுட்டுக்கொலை செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர் தலிபான்கள்.
இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாஹித் கூறுகையில், “பெண் காவலர்களை தலிபான்கள் கொல்லவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. தனிப்பட்ட பகை காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம். கடந்த ஆட்சியில் அரசில் பணியாற்றியவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்துள்ளதை உறுதி செய்வோம்” என்றார். கொலையை நேரில் பார்த்தவர்கள், அவர்கள் தலிபான்கள் தான் என கூறுகிறார்கள் பதைபதைப்புடன்.