நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சளி, இருமல், தலையில் நீர் ஏற்றம் போன்ற பிரச்னைகளுக்கு முசுமுசுக்கை, ஆடாதோடை, வெற்றிலை, துளசி போன்றவை மருந்தாகிறது.
முசுமுச்சுகை இலையை பயன்படுத்தி தொண்டைக்கட்டுக்கான தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முசுமுசுக்கை, ஆடாதோடை, அரிசி திப்பிலி, தேன் அல்லது பனங்கற்கண்டு. 10 முசுமுசுக்கை இலை, 2 ஆடா தோடை இலை ஆகியவற்றை எடுக்கவும். இதனுடன் 4 அரிசி திப்பிலியை பொடி செய்து போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்துவர தொண்டை கட்டு விலகிப்போகும். சளி பிரச்னை சரியாகும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட ஆடாதோடை அற்புத மருந்தாக விளங்குகிறது. இது கொத்துக்கொத்தாக வெள்ளை நிற பூக்களை கொண்டது. தொண்டைக் கட்டை சரிசெய்யும் தன்மை உடைய முசுமுசுக்கையின் தாவர பெயர் மதராசபட்டனா. இதன் இலையின் பின்புறம் சொரசொரப்பை பெற்றிருக்கும். இது பல்வேறு நன்மைகளை கொண்டது. ஆடாதோடை பொடி, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
கண்டங்கத்திரி செடியை பயன்படுத்தி தொண்டை வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கண்டங்கத்திரி, திப்பிலி, பனங்கற்கண்டு. கண்டக்கத்திரி செடியில் முட்கள் அதிகம் இருக்கும் என்பதால் இலை, காய்களை பாதுகாப்பாக எடுக்கவும். இதனுடன் 2 திப்பிலி சேர்க்கவும். சிறிது நீர்விட்டு அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதை வடிகட்டி காலை, மாலை என 3 நாட்கள் குடித்துவர சளி வெளியேறும். இருமல் இல்லாமல் போகும். தொண்டை வலி சரியாகி இதம் தருகிறது. மார்பக கோளாறுகள், சளி, இருமல், ரத்த ஓட்டம், இதயம் சம்மந்தமான பிரச்னைகளுக்கு கண்டங்கத்திரி மருந்தாகிறது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. வெற்றிலை, லவங்கம், துளசி ஆகியவற்றை தேனீராக்கி குடிப்பதால் ஆரம்ப நிலையிலேயே தொண்டை வலி வராமல் தடுக்கலாம்.
தொண்டை வலி, சளி, இருமல் பிரச்னைகளுக்கு இல்லத்திலேயே எளிய மருத்துவத்தை செய்து பயன்பெறலாம். இது பக்கவிளைவுகள் இல்லாதது.