போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்ற வேண்டும் என்று புடின் அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைனுக்கு எதிராக போர் நடந்து வருகிறது. வான்வழி, தரை வழி மற்றும் கடல் வழி என மும்முனைத் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன .உக்ரைன் நாட்டில் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தகவல்தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் தீவிரமாக போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளது. அதேசமயம் ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு ஸ்வீடன் உதவிக்கரம் நீட்டியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி உள்ள ஸ்வீடன் பிரதமருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.அதேசமயம் உக்ரைன் ராணுவம் போர் புரிவதை நிறுத்தினால் அந்நாட்டுடன் பேச தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்த நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும் என்றும் உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.