உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போரில் இருதரப்பினரும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதிநவீன, அதிபயங்கர ஆயுதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ரஷ்யா, உக்ரைனில் பெரிய அளவில் அவற்றைப் பயன்படுத்தாத வகையில் தனது போர் யுக்தியை வடிவமைத்துள்ளது. குறுகிய தூர இலக்குகளைத் தாக்க காலிபர் வகை ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியது.
இது துல்லியமாகச் சென்று இலக்கை தாக்கக் கூடியது. 500 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளைத் தாக்க இஸ்கந்தர் வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைன் போரில் ரஷ்யாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக அதன் அதிநவீன பீரங்கி வகைகள் உள்ளன. பியோனி, ஹயாசிந்த், அகாசியா என பூக்களின் பெயர்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ள இந்த பீரங்கிகள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. அதிக உயிர்ப்பலி வாங்கும் கிளஸ்டர் குண்டுகளை ரஷ்யா இந்தப் போரில் பயன்படுத்துவதாக் உக்ரைன் கூறியுள்ளது.
போர் விமானத்திலிருந்து வீசப்படும் இந்த கிளஸ்டர் குண்டுகள் இலக்கில் சிறுசிறு குண்டுகளாகப் பிரிந்து விழுந்து வெடித்துச் சிதறும். இதனால் உயிர்ப்பலி அதிகரிக்கும். ரஷ்யாவின் மற்றொரு நாசகார ஆயுதவகை தெர்மோபேரிக் ஆயுதங்கள். இவை வளிமண்டலத்தை சூடாக்கி அங்குள்ள காற்றை கொதிநிலைக்குக் கொண்டு செல்லும்.
இதனால் தெர்மோபேரிக் ஆயுதத்தின் இலக்கின் கீழ் உள்ள அனைத்தும் எரிந்துவிடும். பதுங்கு குழிகள், சுரங்கங்களில் இருப்போரைக் கூட இந்த குண்டு விட்டுவைக்காது என்கின்றனர்.
ரஷ்ய ராணுவத்திடம் இருக்கும் அதே வகையிலான சோவியத் காலத்தில் கட்டமைக்கப்பட்ட பல ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் ஆகியவை உக்ரைனிடம் உள்ளன. ஆனால் இவை ரஷ்யாவிடம் இருக்கும் அளவிற்கு துல்லியமானவை அல்ல.
உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய பீரங்கிப் படையினரை சிதறடிக்க அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையே உக்ரைனின் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. தோளில் தூக்கிச் சென்று இயக்கும் வகையிலான இந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளன.தரையிலிருந்து சென்று தரையைத் தாக்கும் ஸ்டிங்கர் வகை ஏவுகணைகள் ரஷ்ய படையினரை சமாளிக்க உக்ரைனுக்கு கை கொடுத்திருக்கின்றன. இதனையும் தோளில் சுமந்து சென்று இயக்க முடியும். ஏபிசி எனப்படும் கவச வாகனங்கள் ரஷ்ய பீரங்கிப் படையினரை எதிர்த்துப் போரிட உக்ரைன் வீரர்களுக்கு உதவியாக இருக்கின்றன.
இந்த போருக்கு முன்பாக உக்ரைனுக்கு துருக்கி வழங்கியிருந்த பேராக்டர் டிரோன்கள் நகருக்குள் நுழையும் ரஷ்யப்படைகளை துல்லியமாக தாக்க பெரிதும் உதவியாக இருக்கின்றன. எஸ் 300 எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை தடுத்து நிறுத்த உக்ரைனுக்கு கைகொடுத்திருக்கிறது.