ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, உக்ரைன் ஜனாதிபதி,ரஸ்யாவிடம் சரணடையவேண்டும் என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த தகவலை உக்ரைனிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பென்னட்டுக்கும், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலின்போது புடினின் இந்த நிபந்தனை கூறப்பட்டதாக அமெரிக்க செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் உக்ரைன் ஜனாதிபதி அதற்கு தயாரில்லை என்று உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ரஸ்ய படைகள் ஆக்கிரமித்த பின்னர், ஜனாதிபதி புடினை, சந்தித்த முதல் உலகத் தலைவர், இஸ்ரேலிய பிரதமராவார். இதன்போதே போரை நிறுத்தவேண்டுமானால், உக்ரைனிய ஜனாதிபதி சரணடையவேண்டும் என்ற நிபந்தனையை ரஸ்ய ஜனாதிபதி விதித்துள்ளார்.
எனவே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக புடினின் நிபந்தனைகளை ஏற்குமாறு ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் கூறியதாக உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த கூற்றுக்கள் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை உக்ரைனிய ஜனாதிபதி தமது நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியை வழங்கியுள்ளார்,
இராணுவம் "ஒரு மூலோபாய திருப்புமுனையை அடைந்துள்ளது", அது ரஸ்ய படையெடுப்பிற்கு எதிராக வெற்றிபெறும் என்று அவர் குறிப்;பிட்டுள்ளார்
“ஆக்கிரமிப்பாளர்களின் சண்டை விரைவில் முடிவடையும்" என்று எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
உக்ரேனிய நிலத்தை விடுவிக்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்று கூற முடியாது. ஆனால் நாங்கள் அதைச் செய்வோம் என்றும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்