உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நிலையில் உக்ரைனும் தளராது ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.
உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷிய படை அறிவித்த நிலையில் , உக்ரைன் படைகள் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது.
எனினும் முன்னதாக நேற்று குறிப்பிடத்தக்க அம்சம், ஏறத்தாழ 15 லட்சம் பேர் வசிக்கிற அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்ததுதான்.
இதுதான் மத்திய உக்ரைனின் மிகப்பெரிய கலாசார, அறிவியல், கல்வி, போக்குவரத்து, தொழில் மையமாக திகழ்கிறது. நேற்று காலை வரை ரஷிய துருப்புகள், கார்கிவ் நகரத்தின் புறநகர்களில் தான் இருந்தன.
அதன் பின்னர் பிற படைகள் உக்ரைனுக்குள் தீவிர தாக்குதல் தொடுக்க நெருக்கின. ஆனாலும் உக்ரைன் படைகளும் அவற்றை எதிர்ப்பதில் தீவிரம் காட்டின. கார்கிவ் நகருக்குள் ரஷிய போர் வாகனங்கள் நகர்ந்து செல்வதையும், ரஷிய துருப்புகள் நகருக்குள் சிறுசிறு குழுக்களாக சுற்றித்திரிந்ததையும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.
அதில் ஒரு வீடியோவில் குண்டுவீச்சில் சேதம் அடைந்து ரஷிய துருப்புகளால் கைவிடப்பட்ட ரஷிய லகுரக வாகனங்களை ரஷிய துருப்புகள் ஆய்வு செய்ததையும் பார்க்க முடிந்தது. ரஷிய படைகள், கார்கிவ் நகருக்கு கிழக்கே எரிவாயு குழாயை வெடிக்கச்செய்தன. பெரும் மோதல்கள், தெருச்சண்டைகளுக்கு பின்னர் இந்த நகரை ரஷிய படைகள் வசப்படுத்தி விட்டன என தகவல்கள் வெளிவந்தன.