உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24 ஆம் திகதி போர் தொடுத்த நிலையில் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. காயமடைந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக போலந்தின் ரிசோ விமான நிலையத்தில் பேட்டியளித்த மத்திய மந்திரி வி.கே.சிங், கூறியதாவது,
கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது என்றார். துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது.
கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என கூறினார்.
இதேவேளை ஏற்கெனவே கார்கிவில் உணவு வாங்கச் சென்ற போது ரஷிய குண்டுக்கு கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா இரையாகினார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோட், இந்தியா டுடே டிவியிடம் கூறுகையில் , மூன்று நான்கு பேர் எங்களை நோக்கி சுட்டனர். இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.