இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனமும் ரஷியாவில் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷியாவின் தாக்குதல் 10-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷியா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பும் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன்படி, சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரஷியாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், சாம்சங் நிறுவனத்தில் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிற சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய ஸ்மார்ட்போன் வருவாயில் சுமார் 4% ரஷ்யாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மூலம் வருகின்றன.ரஷ்யாவின் கலுகாவில் சாம்சங் தொலைக்காட்சி தயாரிப்பு ஆலையும் உள்ளது. தற்போது நிலவும் போர் நடவடிக்கையால் ரஷியாவிற்கு ஏற்றுமதி செயப்படும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரஷிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை காட்டிலும் அதிகம் கோலோச்சுவது தென்கொரிய நிறுவனமான சாம்சங்கின் மொபைல்போன்களே ஆகும். அங்கு ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
இதுகுறித்து சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. எங்களின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அவ்ர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
ரஷ்யா மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து தென் கொரியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்திருந்தாலும், ரஷிய நாட்டிற்குள் கப்பல் வழிகள் மற்றும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கொரிய நிறுவனங்களால் அப்பகுதிக்கு பொருட்களை அனுப்புவதை கடினமாக்கி உள்ளன. இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ரஷியாவுக்கு எதிராக உலகின் பல்வேறு பெரு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளதால் அந்நாடு பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. முன்னதாக ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கின. அந்த வகையில் இப்போது சாம்சங் நிறுவனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நியாயமற்ற, தூண்டப்படாத மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை கண்டனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் கணிணி மென்பொருள் நிறுவனமான இன்டெல் கார்ப்பரேஷன் போலவே ரஷ்யாவிற்கு கணிணிகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருக்கும் ‘ஹெச்பி’ கணிணி நிறுவனம் ரஷிய நாட்டிற்கான ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.