உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித்தபோதும் ரஸ்யா அதனை உரியமுறையில் கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ரஸ்யர்கள் அந்த நகரத்தில் எறிகனை வீச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"ரஷ்யர்கள் தொடர்ந்தும் குண்டு மற்றும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இது வெறுக்கத்தக்க செயல் என்று மரியுபோல் துணை முதல்வர் செர்ஹி ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
"மாரியுபோலில் போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படவில்லை.
பொதுமக்கள் தப்பித்து செல்ல தயாராக உள்ளபோதும் தாக்குதல்களுக்கு மத்தியில் அவர்களுக்கு தப்பிக்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளதாக மரியுபோல் துணை முதல்வர் செர்ஹி ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் ரஷ்ய படைகள் இன்னும் முன்னேறி வருவதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களை விட கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
எனினும் ரஷ்யப் படைகள் தெற்கு துறைமுக நகரமான மைகோலாய்வை நோக்கி முன்னேறி வருவதாக எச்சரித்துள்ளது.
கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை உக்ரைன் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அதே நேரத்தில் வடகிழக்கு நகரமான சுமியில் சண்டை இடம்பெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
நான்கு நகரங்களும் ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இதேவேளை பல நாட்களாக ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோலில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, நகரின் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும், மேலும் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.