மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்தமைக்காக சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
தான் எவரையும், எந்த வகுப்பையும் அல்லது நபர்களின் சமூகத்தையும் தூண்ட விரும்பவில்லை எனவும் அவர் நேற்று கூறியுள்ளார்.
மற்றொரு நபரை எரிச்சலூட்டும், துஷ்பிரயோகம் செய்யும், அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நோக்கத்துடன் ஆபாசமான, அநாகரீகமான, பொய்யான, அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் தன்மை கொண்ட எந்தவொரு தூண்டுதலை நான் உருவாக்கவில்லை அல்லது ஆரம்பிக்கவில்லை.
எனினும் மலேசியர்களை எச்சரித்தமைக்காக நான் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன். மலேசியா மற்றுமொரு இலங்கையாக மாறக் கூடாது எனவும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் விளைவிக்கும் கருத்தை கொண்டிருந்ததாகக் கூறப்படும் லிம் கிட் சியாங்கின் டுவிட் தொடர்பாக மலேசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் லிம் இந்த கருததுக்களை வெளியிட்டுள்ளார்.
"கடந்த வாரம் இலங்கையில் நடந்தது போல் மலேசியாவின் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் கோபமடைந்த போராட்டக்காரர்களால் தீவைக்கப்படுமா?" என லிம் டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
இது தொடர்பாகவே மலேசிய பொலிஸார் அவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
லிம் கிட் சியாங்கின் டுவிட்டர் பதிவு கடந்த வியாழன் முதல் வாட்ஸ்அப்பில் வைரலாக பகிரப்பட்டு வருவதாக கோலாலம்பூர் புக்கிட் அமான் பொலிஸ் தலையைமகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் தெரிவித்துள்ளார்.