கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல வணிகங்களின் உரிமையாளராகவும், இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் அவர் செயற்படுகின்ற நிலையில் முதலில் அவற்றில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என கூறப்படுகின்றது.
எனினும் அவருக்கு சொந்தமான நிறுவனம் அல்லது இயக்குனராக செயற்படும் நிறுவனம் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்தால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகிவிடும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 19 (E) இல் இதற்கு தொடர்புடைய சட்டங்களை கொண்டுள்ளது. இந்த முறையில் இதற்கு முன்னர் தனது நிறுவனத்துடன் அரசாங்கம் கையாண்டமையால் ராஜித சேனாரத்னவின் ஆசனமும் இரத்துச் செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, பசில் ராஜபக்சவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவை நியமிக்க முடியாது என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என தம்மிக்க பெரேரா சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேரா அரசியலில் பிரவேசித்ததன் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவார் என்ற சந்தேகம் காரணமாக தம்மிக பெரேராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சுப் பதவி வழங்குவதற்கான திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தம்மிக்க தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் பிரவேசிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அவரது அனைத்து நிறுவனங்களின் பங்கு விலையும் நேற்று பாரியளவில் உயர்வடைந்துள்ளது.