உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டம் ஷஷ்வான் கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணமாகி 22 வயதில் மனைவி உள்ளார். இதனிடையே அந்த நபருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே பகை இருந்துள்ளது. இதில் கடுப்பான அந்த நபர் தனது எதிரிகளை பிரச்சனையில் சிக்கவைக்க திட்டமிட்டுள்ளார்.
தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என போலீசில் புகார் அளித்தால் எதிரிகள் சிறைக்கு செல்வார்கள் என தப்புக்கணக்கு போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது நண்பனை அழைத்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யும்படி கூறி தனது திட்டத்தை கூறியுள்ளார்.
மேலும் பாலியல் வன்கொடுமையை தனது எதிரிகள் தான் செய்தனர் என போலீசில் கூறி அவர்களை சிறையில் தள்ளிவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனை அந்த நண்பர் ஏற்றுள்ளார். நேற்று திட்டமிட்டபடி அந்த நபர் தனது மனைவியை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த அந்த நண்பர் அவரின் மனைவியை இரு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதையடுத்து திட்டமிட்டபடி தனது எதிரிகள் தான் தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் தன் கணவர் தான் அவரது நண்பனை ஏவி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அவரது நண்பர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் கணவனையும், பாலியல் வன்கொடுமை செய்த அவரின் நண்பனையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் விவரங்களை இதுவரை போலீசார் வெளியிடவில்லை.