ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படுவதாகவும் சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க போவதாகவும் சீனா அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. கடந்த 2020ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அரசு விடுதி, காப்பகங்களில் 2 வாரம் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். பின்னர் அது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இதில் 3 நாட்கள் அவர்கள் கண்காணிப்பில் மட்டும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அரசின் பூஜ்ய கொரோனா கொள்கையை எதிர்த்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து, பூஜ்ய கொரோனா கொள்கையை அரசு விலக்கி கொண்டது. இதையடுத்து சீனா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 8ம் தேதி முதல், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க இருப்பதாகவும், 3 ஆண்டுகளுக்கு பிறகு, சர்வதேச பயணிகளுக்கான கட்டாயத் தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும் சீனா அறிவித்துள்ளது. கொரோனா பரவல் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் தொற்று மேலும் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
*வர்த்தக நிறுவனங்கள் வரவேற்பு
சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் ரத்து அறிவிப்பை சீனாவில் செயல்பட்டு வரும் அமெரிக்கா, இங்கிலாந்து வர்த்தக அமைப்புகள் வரவேற்றுள்ளன. சீனாவின் வர்த்தக வளர்ச்சிக்கு ஒரே தடை கல்லாக இருந்த தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்படுவதன் மூலம் இயல்பான வர்த்தக நடவடிக்கைக்கு வித்திடப்பட்டுள்ளதாக இவை தெரிவித்துள்ளன. மேலும், சீனா மீண்டும் முதலீட்டிற்கான முக்கிய நாடாக மாறும் என்று கூறியுள்ளன.
* முதல் முறையாக வெளிநாட்டு தடுப்பூசி
சீனாவில் இதுவரை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த தடுப்பூசிகளினால் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, 2 தடுப்பூசிகளுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்த பிறகும், முதியோர்கள் உள்பட யாரும் சீன தடுப்பூசியை போட்டு கொள்ள முன்வரவில்லை. இந்நிலையில், முதல் முறையாக ஜெர்மனியில் இருந்து பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிகள் சீனாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை முதலில் சீனாவில் உள்ள ஜெர்மன் நாட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.