ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான பெண்கள் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் விவாகரத்தை ரத்து செய்து அந்த பெண்களை மீண்டும் கணவனோடு சேர்த்து வைக்கும் பணியை தாலிபான்கள் கையில் எடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெண்கள் தலைமைறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாலிபான்கள், மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தான் மீண்டும் அங்கு அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
தாலிபான்கள் தொடர்ச்சியாக பெண்களை வீட்டிலேயே முடக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். பெண்களை மட்டுமே குறிவைத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பொது இடங்களில் ஆண் துணையின்றி நடமாட கூடாது. வெளியே பணி செய்யக்கூடாது. பூங்கா, ஜிம் உள்ளிட்டவற்றுக்கு செல்ல கட்டுப்பாடு, டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும், உயர்கல்வி பயிலவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கருத்தடை மருந்துகளை பெண்கள் பயன்படுத்தவும், விற்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ஏறக்குறைய பெண்களின் முன்னேற்றத்துக்கான அனைத்து வழிகளையும் தாலிபான்கள் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தாலிபான்களின் இன்னொரு உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கணவர்கள் துன்புறுத்தியதை காரணம்காட்டி விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் பெண்கள் அனைவரும் மீண்டும் தங்களின் கணவருடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பான விவாகரத்தை ரத்து செய்து பிரிந்த கணவன்-மனைவியை ஒன்றிணைக்கும் பணியை தாலிபான்கள் தொடங்கி உள்ளனர். இதனால் பெண்கள் தாங்கள் விரும்பாத முன்னாள் கணவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல பெண்கள் ஓடி ஓடி ஒளிந்து தலைமைறவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.