இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்னியாவை (Borneo) தலைநகராக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறது
ஜாவா கடலில் ஜகார்த்தா மூழ்கும் அச்சுறுத்தல் இருப்பதாலும் அடிக்கடி இடம்பெறும் நிலநடுக்கங்கள் காரணமாகவும் தலைநகரை மாற்றும் பணிகளை இந்தோனேசியா ஆரம்பித்துள்ளது.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ( Joko Widodo), நெரிசல், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகார்த்தாவிற்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால், விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஜகார்த்தா ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022ஆம் ஆண்டு மத்தியிலேயே புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டது.
தற்போது, இந்தோனேசிய அரசானது ஜகார்த்தாவை காலி செய்துகொண்டு போர்னியோ தீவை நோக்கி நகர்கிறது.
பசுமையான தீவுப் பகுதியை தலைநகராக மாற்றுவதற்கு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். வனப்பகுதி அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனினும், தலைநகரை மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
ஜகார்த்தா வேகமாக கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், 2050ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் நிலத்தடி நீர் மற்றும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.