வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவரை நாடுகடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றதில் விளக்கம் அளித்துள்ளது.
விஜய் மல்லையாவை நாடுகடத்துவதற்கு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் குறித்து நீதிபதிகளான யு.யு.லலித், அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்தியரசு சார்பில் முன்னிலையான வழக்குறைஞர், துஷார் மேத்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது வாதிட்ட துஷார் மேத்தா, “விஜய் மல்லையாவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்துவர மேலும் சிறிது காலம் தேவைப்படுவதாகவும், அதுதொடர்பாக விரிவான கள நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை வரும் மார்ச் 15 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதேவேளை இதன்போது மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி தேவேஷ் உத்தம் அளித்த கடிதமும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த கடிதத்தில், “பிரித்தானியாவில் உள்ள பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தி அழைத்துவர மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் நீதித்துறை நடவடிக்கைகள் முழுமையடையாமல் மல்லையாவை நாடு கடத்த இயலாது என்றும், இதில் சில ரகசிய அம்சங்கள் இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம்கூட இந்திய உள்துறை செயலர் பிரித்தானிய உள்துறை அதிகாரியிடம் இதுதொடர்பாக தமது கவலைகளை எடுத்துக் கூறியுள்ளார். பிரித்தானியாவவின் சட்ட நிலைப்பாட்டால் மல்லையாவை இந்தியா அழைத்துவர தாமதம் ஆகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.