தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பிறகு நோய் தொற்று பாதிப்பு குறைவு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் பற்றிய அறிவிப்பு ஆகிய முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே வெளியிடுவது வழக்கம்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட அளவில் உள்ள கொரோனா பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு, தடுப்பூசி பணி, புதிய தளர்வுகள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசித்து வருகிறார்.
இந்தநிலையில் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே பரவலாக உள்ளது.
தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே பிப்ரவரி மாதத்துக்கான அறிவிப்பில் மற்ற மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் தற்போது சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பிப்ரவரி மாதத்தில் கூடுதல் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது.