நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.
அந்த பரவல் உச்சத்தை தொட்ட பிறகு தற்போது இறங்கு முகத்தில் இருந்தாலும், பாதிப்பு என்பது அதிகமாகவே உள்ளது. உயிரிழப்பும் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி கர்நாடகம், தமிழ்நாடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.
இதில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா 3-வது அலை குறித்து குழந்தைகளிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள் அமல்படுத்துகிறார்கள். அவற்றை கண்காணிக்கும் பணிகளை அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்கிறார்கள்.
மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கலெக்டர்கள் மட்டுமின்றி மாவட்ட அளவில் அனைத்து அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவால் ஆகும். கொரோனாவை தடுக்க கிராம பஞ்சாயத்து அளவில் செயல்படைகளை அமைக்க வேண்டியது அவசியம். மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பிற அமைப்புகளின் உதவிகளை அதிகாரிகள் பெற வேண்டும்.
கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொண்டால், இந்த வைரஸ் பரவல் சங்கிலித்தொடரை நம்மால் துண்டிக்க முடியும் என்று பிரதமர் கூறினார். இந்த பணியில் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பாகுபாடு இன்றி ஈடுபட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் குழந்தைகள் மத்தியில் உள்ளூர் மொழியில் கார்ட்டூன், கதைகள் மூலம் கொரோனாவின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தவில்லை. ஆனால் இதுகுறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு பிரதமர் வழங்கியுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு எடுப்பார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.