முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாசன் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு சென்றார். அங்கு தனது தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
கர்நாடகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அதன் பரவல் விகிதத்தை 5 சதவீதத்திற்குள் கொண்டு வரும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித விலகலை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் அதிக தடுப்பூசிகள் வரும். அவை மாவட்டங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.
கர்நாடகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால் விவசாயிகளுக்கு வழங்க தேவையான விதைகள், உரம் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உரங்கள் பதுக்குவதை தடுக்க வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனே்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.