பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது
பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த மோடி போராட்டம் நடத்தினார். மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜனதா இப்போது அவற்றை மறந்துவிட்டது. மாறாக பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கொரோனா ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலைகளை இழந்துவிட்டனர். உற்பத்தி நின்றுவிட்டது. சிறிய அளவில் வாகனங்களை வைத்திருப்பவர்கள், எவ்வாறு பெட்ரோலை போட்டு ஓட்டுவது?.
கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அதிளவில் வரி வருவாய் செல்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரிகள் மத்திய அரசுக்கு செல்கின்றன. அவ்வாறு இருந்தும் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.
பிரதமர் மோடி எப்போதும் மக்களின் உணர்வுபூர்வமான விஷயங்களை பேசி அவர்களை ஏமாற்றுகிறார். அவரது ஆட்சியில் நரகத்தை காண்கிறோம். மதவாதத்தை விதைப்பதே பா.ஜனதாவின் வேலை. நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக பிரதமர் மோடி கூறினார். மாறாக இருக்கின்ற வேலைகள் பறிபோய்விட்டன. ராமர் பெயரை உச்சரிக்கும் பா.ஜனதாவினருக்கு சாமானிய மக்களின் பிரச்சினைகள் புரிவது இல்லை.