சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழாவை ஒட்டி, கோவில்பட்டி கட்டாரங்குளத்தில் 3 கூடுதல் எஸ்.பி-க்கள் தலைமையில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
விடுதலைப்போராட்ட வீரர் அழகுமுத்துக் கோனின் 311-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டுகிறது. இதனையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கட்டாரங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. மேலும், பொதுமுடக்கம் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், ஊர்வலங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணி செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜெயந்திவிழா பாதுகாப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி மாவட்டம் நாலட்டின்புதூர் சமுதாய கூடத்தில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் 3 கூடுதல் எஸ்.பி-க்கள், 9 டிஎஸ்பி-க்கள், 35 காவல் ஆய்வாளர்கள் உள்பட 650 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., கோபி, தலைமையிட கூடுதல் எஸ்.பி கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., இளங்கோவன், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.