மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ் எப்போது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் மணிரத்னம். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.
கொரானா ஊடரங்குக்கு பிறகு சமீபத்தில்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மணிரத்னம். ஏற்கனவே இப்படத்தின் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 30 சதவீத பணிகள் உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நடித்து வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பை முடித்து ஐதராபாத்தில் சில காட்சிகளையும், வேறு பகுதிகளில் சில காட்சிகளையும் எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து முதல் பாகத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை வரும் சம்மர் விடுமுறையில் வெளியிட மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.