தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டகாரர் சுரேஷ்குமார் 58 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு ஜோடி 108 ரன்கள் சேர்த்தது. கங்கா ஸ்ரீதர் ராஜா 57 பந்துகளில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 90 ரன்கள் எடுத்தும், சாய் சுதன் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அருண் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஹரி நிஷாந்துடன் விக்கெட் கீப்பர் மணிபாரதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தங்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்த நிலையில் மணி பாரதி வெளியேறினார். அவர் 32 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய விவேக் டக் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹரி நிஷாந்த் 37 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 70 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மணிபாரதிக்கு அளிக்கப்பட்டது.