கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடிய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. சோதனைக்கு பின்னர் வேலுமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் கோவை சுகுணாபுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இரும்பு தடுப்புகளை அகற்றி ரகளை செய்ததாக 10 பேர் மீதும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. விடுதியில் நேற்று எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தியபோது, அத்துமீறி உள்ளே நுழைய முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்.பி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட 10 பேர் மீதும் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.