ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதை கண்டறிய புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அல்லது அவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள், உறுப்பினர்களின் உறவினர்களின் அரச வாகனம் அல்லது வேறு சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு புலனாய்வு பிரிவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அவ்வாறான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உத்தியோகபூர்ற்ற முறையில் அவ்வாறான சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டால் முதலில் அந்த அமைச்சருக்கு தெரியப்படுத்திய பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அண்மையில் ராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அருந்திக்க பெர்னாண்டோவின் மகன், அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய சர்ச்சையில், தனது பதவியை அருந்திக்க ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.