குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவியல் விசாரணை திணைக்களம் வழங்க முடியாது எனவும் அதற்கு நீதிமன்றங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளை தண்டிக்கவே பொது மக்களின் பணத்தில் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, பொலிஸாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதவான் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
எஸ்ரா சேனேகா தடுப்பூசி மருந்துடன் வேறு மருந்தை கலந்து மக்களுக்கு செலுத்துவதாக சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்டு மக்களுக்கு பொய்யை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் மகனது செல்போனை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைப்பற்றினர்.
எனினும் இதுவரை அது சம்பந்தமான விசாரணைகளை நடத்தாது குறித்து நீதவான் குற்றவியல் விசாரணை திணைக்களத்தை சாடியதுடன் அந்த சிறுவனின் செல்போனை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரான அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.
விசாரணைகளின் போது சந்தேக நபரின் மகனது செல்போனை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை நடத்தி வந்தனர். சிறுவன் இந்த செல்போன் மூலமே இணையத்தளம் வழியாக கல்வி கற்று வந்துள்ளார்.
பொலிஸார் செல்போனை கைப்பற்றியுள்ளதால், சிறுவனால் பாடங்களை கற்க முடியாதிருப்பதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.