இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இவை இரண்டின் பதவிக்காலமும் முடிந்து விட்டன.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முடிவடைந்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அவர், அவற்றின் பதவிக்காலத்தை நீடித்தார்.
எனினும் அரசாங்கம் தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்பதால், 9 மாகாண சபைகளில் வடக்கு, கிழக்கு, மேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் தோல்வியடையும் வாய்ப்புகள் உள்ளன.
இதன் காரணமாகவே அரசாங்கம் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், 330 உள்ளூராட்சி சபைகளில் 180 முதல் 190 வரையான சபைகளை கைப்பற்ற முடியும் என அரசாங்கம் நம்புவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், அரசாங்கத்திற்கு சாதகமான அமையும் வகையில் தேர்தல் முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமி்டுள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி சபை ஒன்றை கைப்பற்ற வேண்டுமாயின் 50 வீதமான உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும் என்ற வரையறையை 35 வீதமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.