முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற போதிலும் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலில் வளங்கள் சட்டவிரோத தொழில் செய்வபவர்களால் அழிக்கப்படுவரும் நிலையில் தங்களது குடும்பங்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்தொழிலாளர்கள் தமது நிலைமையை புரிந்துக்கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த அதிகாரிகளை உடனடியாக முல்லைத்தீவிலிருந்து மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் சட்டவிரோத தொழில்களை நிறுத்துமாறு கோரியும் இரண்டாவது நாளாக போராட்டத்தினை தொடர்ந்துள்ளார்கள்.