இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்றது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐவருக்கு பதிலாக ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கே உண்டு.
இது தொடர்பாக 2002 ஆம் ஆண்டின் 35 ஆவது இலக்க இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைகுழுச் சட்டத்தில் 4 (4) பிரிவின் படி ஆணைக்குழுவுக்கான தவிசாளர் துறைக்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் தற்பொழுது இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் கீழ் இருக்கின்ற நிலையில் அமைச்சிற்கு பொறுப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு உறுப்பினர்களை நாடளுமன்ற பேரவையின் ஒருமைப்பாட்டுடன் நியமிக்க வேண்டியவராக உள்ளார்.
குறித்த வெற்றிடங்களை சமர்ப்பித்து ஒரு மாத காலத்துக்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுவரை இந்த வெற்றிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது. எனவே இதற்கு பொறுப்பான பிரதமர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கதாதன் காரணமாக ஏற்கனவே திரவ இயற்கை எரிவாயுவிற்காக வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து விலைமனுக் கோரல்களினூடாக மின்சாரத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தாமதமாகின்றது.
அனுமதிக்கப்பட்ட மின்சார விலையை மீளப்பரிசீலனை செய்தல், தொகை மின்சார விநியோக உரிமையாளர்களிற்கான விலை தீர்மானிப்பு மற்றும் பொது மக்களுக்கான மின்சார கட்டணங்கள் தொர்பான ஆராய்வு போன்ற பல விடயங்கள் தாமதமாகின்றன.“ எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்ற நிலையிலேயே சேவையாளர்கள் சங்கத்தினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.