இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க அவசியமான தீர்மானங்களை எடுக்க தைரியமாக முன் வரவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் இக்கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இன்று எமது தாய் நாடு பொருளாதார, சுகாதார துறைகளில் மாத்திரமின்றி, சமூக ரீதியாகவும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இவ்வாறாக பல பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுத்து கடந்து சென்ற பல சந்தர்ப்பங்கள் எமது கடந்த கால வரலாற்றில் இடம்பெற்றிருந்தன.
இவை அனைத்தையும் விட 73 வருடங்களுக்கு முன்னர் , எமது தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டமானது, நாம் எதிர் கொண்ட ஏனைய சவால்களையும் விட பிரமாண்டமானதும் தீர்க்கமானதுமாகும்.
எமது நாடு முன்னோக்கிச் செல்கின்ற திசை, எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கப் போகும் நாடு என்பன தொடர்பாக இந்த சுதந்திரம் கிடைத்த 7 தசாப்தங்களாக பல சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கப் போகும் இந்த நாடு குறித்த எமது கனவுகளும் அபிலாஷைகளும் அன்று போலவே இன்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக மழுங்கடிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதாகும்.