இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்திற்கு அறிவித்ததாக நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரால் நாடாளுமன்ற வளாகத்திற்கு உத்தேச விஜயம் நடைபெறாது என்று வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகராலயம் ஊடாக இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
நாடாமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை
இவ்வாறானதொரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை இடம்பெறாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாட்கள் உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த வருடத்தில் நாட்டிற்கு வருகை தரும் முதல் வெளிநாட்டுத் தலைவராக இருக்கும் இம்ரான் கான், இந்த பயணத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அளித்த உறுதிமொழியை வரவேற்பதாக இம்ரான் கான் தனது ருவிட்டரில் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.