இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கி கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல என அவர் நினைவூட்டியதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமான செயலைப் பார்த்து கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கை தேசிய காங்கிரஸ் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டை தழுவியதாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் நேபாளத்திலும் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் வௌியாகிய அறிவிப்பிற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேபாள வௌிவிவகார அமைச்சர் Pradeep Kumar Gyawali தமது ருவிட்டர் தளத்தில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் உள்விவகார அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான அமித் ஷாவின் கருத்துக்களுக்கு நேபாள அரசு தனது எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா கருத்தொன்றை வெளியிட்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, தனது அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இலங்கை வாழ் தேச பற்றாளர்கள், வெளிநாட்டு கட்சியொன்றுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தான் நம்பவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.