தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக தமது எழுந்தமானமாக செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில்
இன்றைய தினம் (9) தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் வட கிழக்கு பராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம், யாழ் கிளிநொச்சி உதவி பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் அங்கஜனின் கோரிக்கையை அடுத்து அமைச்சில் உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது.
இதில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் திடீரென தொல்பொருள் திணைக்களம் தமிழில் பேச இயலாத உத்தியோகத்தர்கள் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக தமது எழுந்தமானமாக செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் மக்கள் அதிருப்தியும் சந்தேகமும் அடைந்துள்ளார்கள் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் அமைச்சரினதும் அமைச்சின் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
தற்போது சர்ச்சைகுரிய யாழ். புத்தூர் நிலாவரை கிணறு, கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள எத்தனித்த நிலையில் மக்களின் சந்தேகத்தினையடுத்து ஏற்பட்ட எதிர்ப்பினால் உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் நிலாவரை கிணறு ஆகிய பிரதேசங்களில் தற்காலிகமாக சகல அகழ்வு பணிகளையும் நிறுத்துமாறு பணித்து அமைச்சர் தான் நேரடியாக வருகை தந்து ஆராயும் வரை அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாது என உறுதியளித்தார். அதேசமயம் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களை நேரடியாக ஊர் மக்கள், சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் களவிஜயம் மேற்கொள்ளுமாறும் கேட்டுகொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது தொல்பொருள் விடையங்களை ஆய்வு செய்யும்போது மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு ஏதும் தெரிவிக்காமல் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தான்தோன்றிதனமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்வதால் அந்தப் பகுதிகளில் அரசியல் ரீதியாக மக்களை திசைதிருப்பும் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படுவதாகவும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக உடனடியாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தொல்பொருள் திணைக்களம் சார்பாக அந்தந்த மாவட்டங்களின் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு கட்டாயமாக மாவட்ட உதவி பணிப்பாளர் தவறாமல் கலந்து கொள்ளச் செய்யுமாறு பணித்தார்.
அதே சமயம் தொல்பொருள் சம்பந்தமான அகழ்வாராய்ச்சிகள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள பிரதேச சபை, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் ஆகியவற்றிற்கு அகழ்வாராய்ச்சி தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தினால் முன்கூட்டியே அறிவுறுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தொல்பொருள் திணைக்களத்தில் தற்போது கடமையிலுள்ள தமிழ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையிலுள்ள நிலையில் அவர்களை குறித்த துறை விடையதானங்களில் முடிவெடுக்கக்கூடிய பதவி நிலைகளுக்கு பதவி உயர்வு கொடுத்தால் மக்களிடையே மொழி பிரச்சனையில்லாமல் விழிப்பணர்வு, சுமூகமான தொடர்பாடலை ஏற்படுத்த முடியும் என்ற அங்கஜனின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கௌரவ அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்கள் தற்போது கடமையாற்றும் தமிழ் பேசும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்களை தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் வட பிராந்திய அதிகாரி், மாவட்டங்களுக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர்கள், ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் போன்ற பதவி நிலைகளுக்கு நியமிப்பதற்கு விரைவில் அந்தந்த பிரதேசங்களிலிருந்தே விண்ணப்பங்கள் கோரப்படும் என தெரிவித்தார்.